Saturday, October 9, 2010

என் வெளிநாட்டு கனவு

சராசரி சாப்ட்வேர் இன்ஜினியர்களின் கனவு போல நானும் சிறிது காலமாவது வெளிநாட்டில் சென்று வேலை பார்க்க வேண்டும் என்ற கனவில் இருந்தேன். பெங்களூரில் என் கம்பெனி என்னை வேறு கம்பெனிக்கு தாரை வார்த்து (Client location) கொடுத்திருந்தார்கள். எனது மேலாளர் ஒரு முறை சந்திக்க வந்த போது நான் வேலை மாற்றல் வேண்டும் என்றேன், அதுவும் வெளிநாட்டிற்கு செல்ல வாய்ப்பு வேண்டும் என்று கேட்டேன். அதற்கு நக்கலாக பங்களாதேஷும் வெளிநாடுதான் அங்கே போறியா என்று கேட்டு சிரித்துவிட்டு சென்று விட்டார். நானும் விதியே என்று தொடர்ந்து பணியாற்றி கொண்டு இருந்தேன். ஒரு நாள் எங்கள் கம்பெனி விசா டெஸ்க்கில் இருந்து ஒரு மின்னஞ்சல். இந்த டாக்குமென்ட் எல்லாம் வேண்டும் உங்கள் H1 விசாவுக்காக என்றிருந்தது. எனக்கு ஆச்சரியம், சந்தோசம் அதே சமயம் குழப்பம் கூட, உடனே 3 நாட்களுக்குள் எல்லா டாக்குமெண்டோடு என் கம்பெனிக்கு சென்று விட்டேன். ஆர்வத்தோடு எப்போ எனக்கு விசா கிடைக்கும் என்று கேட்க, அந்த அம்மா ஏற இறங்க பார்த்து விட்டு, இது பெரிய ப்ராசெஸ், சில மாதங்கள் ஆகும் என்றார். கூடுதல் தகவலாக, கிட்டதட்ட மூவாயிரம் (அப்போது) பேர் பணி புரியும் எங்கள் கம்பெனியில், 20 பேரை தேர்வு செய்துள்ளார்கள் அதில் நானும் ஒருத்தன் என்றார். எனது மேலாளர் (அக்கௌன்ட் மேனேஜர்) கீழே பணிபுரியும் 80 பேரில் 2 பேர் தேர்வு, அதில் நான் ஒருத்தன். மிக மகிழ்ச்சியோடு அங்கிருந்தே அவரை தொலை பேசியில் தொடர்பு கொண்டு என் நன்றியை தெரிவித்தேன். (அவர் வேறு ஊரில் உள்ள அலுவலகத்தில் உள்ளார்).

அதன் பின்னர், 2-3 மாதங்கள் ஆகியும் ஒரு தகவலும் இல்லை, நான் பெங்களூரில் இருக்கும் என் கம்பெனியை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, எங்களிடம் அதை பற்றி எந்த தகவலும் இல்லை, நீங்கள் பொறுமையோடு இருக்க வேண்டும் என்றார்கள். பின்னர் என் நச்சரிப்பை தாங்காமல் அவர்கள் பொறுமை இழந்து எனக்கு, பதில் மின்னஞ்சல் அனுப்புவதை நிறுத்தி விட்டார்கள். நானும் அது அவ்வளவு தான், இனி வராது என்று முடிவே செய்துவிட்டேன். இதற்கு நடுவில் நான் பெங்களூரில் ஒரு வீடு (Flat) வாங்கி அங்கே குடியமர்ந்துவிட்டேன். சொந்த வீடு என்பதால் எல்லாம் புது பர்னிச்சர்கள் வாங்கி செட்டில் ஆகி விட்டேன்.

இரண்டு மாதங்களுக்கு பிறகு, எதிர்பாராத ஒரு நாள், என் விசா அப்ளிக்கேசன் ஏற்று கொள்ளப்பட்டது என்று தகவல் வந்தது. அதுவரை என் குடும்பத்தில் யாருக்கும் இதை பற்றி தெரியாது. நான் இதை தெரிவித்ததும் எல்லாருக்கும் மிகவும் மகிழ்ச்சி . ஆனால் தாய் பாசம் இதை விரும்புமா? என் தாயாருக்கு மகிழ்ச்சி என்றாலும் நான் வெகு தூரம் சென்று விடுவேன் என்ற கவலை (இன்றும் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி, எப்போ வருவாய் என்று, மூன்று மாதம் முன்னர் தானே வந்தேன் என்றால், சரி அடுத்து எப்போ வருவாய் என்று கேக்குறேன் என்பார்கள்).

விசா ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற உடன், கம்பெனியின் வேறு ஒரு பிரிவில் இருந்து தொடர்பு கொண்டார்கள். நீங்கள் உடனே எங்கள் பிரிவில் சேர முடியுமா, எங்கள் ப்ராஜெக்ட்க்கு உடனே ஆள் தேவை என்று? எனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்றேன். அதற்கு வேற வகையில் என்னை ஒத்துகொள்ள வைத்தார்கள். அதாவது விசா approved மட்டும் தான், இன்னும் ஸ்டாம்பிங் பாக்கி உள்ளது. அதற்கு நான் செல்ல வேண்டும் என்றால் நான் ஏதாவது ப்ரொஜெக்டில் செலக்ட் ஆகி இருக்க வேண்டும் என்றார்கள். நான் விசாரித்ததில் ப்ராஜெக்ட் கிடைப்பது மிக கடினம் அதனால் உடனே ஒத்துக்கொள் என்றார்கள் சில நண்பர்கள். ஆதலால் நான் ஒத்துக்கொண்டேன், பின்னர் லோக்கல் மற்றும் ஆன்சைட் நேர்முகதேர்வுகள், எல்லாம் நல்ல படியாக முடிந்து தேர்வு செய்யப்பட்டேன்.

முதலில் அவர்கள் கொடுத்த அவகாசம், விசா ஸ்டம்பிங் ஆனதும், ஒரு வாரத்தில் செல்ல வேண்டும் என்று. ஆனால், என் நல்ல நேரம் உடனே ஸ்டம்பிங் செய்ய தூதரகத்தில் தேதி கிடைக்க வில்லை. பின்னர் எல்லாம் நல்ல படியாக முடிந்து ஒரு மாதத்தில் அமெரிக்காவுக்கு பயணமானேன். இந்த நவம்பர் 2010 வந்தால் 4 வருடம் முடிந்து விடும், இதில் இருமுறை இந்திய விஜயம் செய்து விட்டேன்.

அடுத்து என் முதல் வெளிநாட்டு பயண அனுபவத்தை பற்றி இங்கே பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன்.

நன்றி, நீங்கள் இதை பொறுமையாக வாசித்தமைக்கு, மீண்டும் வருக.

3 comments:

TBCD said...

தொடர்ந்து எழுதுங்க :-)

வாழ்த்துகள்

Unmaivirumpi said...

Reply to TBCD
ஊகத்திற்கு நன்றி :-))

nisha said...

இதே மாதிரி உங்களுடைய அணைத்து ஆசைகளும் நிறைவேற வாழ்த்துக்கள் ....தொடரவும் .....

Post a Comment