Tuesday, October 12, 2010

என் அமெரிக்க பயணம்

அமெரிக்கன் எம்பசி விட்டு வெளில வரும் போது அவ்வளவு சந்தோசம், இன்டர்வியு பண்ணுனவர் சொன்னது காதுல ஒலிச்சிகிட்டே இருந்தது. "I am keeping your passport, and your visa and passport will reach you within a week, All the best". 

அடுத்து மனைவி மற்றும் குழந்தையின் பாஸ்போர்ட் கிடைக்கணும். மனைவி பாஸ்போர்ட் அப்பளை பண்ணி 4 மாசம் ஆச்சு, ஆனா பிரிண்டிங் மிசின் ஒன்னு வேலை செய்யல (திருச்சி பாஸ்போர்ட் ஆபீஸ்), அதனால கொஞ்சம் லேட் ஆகும் அப்படின்னு சொல்லிட்டாங்க. போறதுக்கு முன்னாடி, நான் 3 வாரம் டெல்லி ஆபீஸ் போய் அமெரிக்காவுல செய்ய போற ப்ராஜெக்ட் பத்தி கத்துக்க சொல்லிட்டாங்க. அதுவும் வசதியா போச்சு, அடுத்த வாரத்திலேயே திருச்சி போய் பாஸ்போர்ட் ஆபிஸ்ல கேட்டதுக்கு, ஒரு வாரத்தில மனைவி பாஸ்போர்ட் வந்துரும்னு சொன்னங்க. நல்ல நேரம், அடுத்த ரெண்டு நாள்லேயே வந்திருச்சி. வாங்கிட்டு திரும்ப திருச்சி போய் ஒரே நாள்ல பையன் பாஸ்போர்ட் ரெடி.அடுத்த வாரத்துக்கு எம்பசில டேட்டும் அவங்களுக்கு கிடைச்சிருச்சி. சரி சுருக்க சொன்ன, எல்லாமே நல்ல படியா முடிஞ்சி, திருவனந்தபுரத்தில இருந்து துபாய் வழிய நியூயார்க் டிக்கெட் கிடைச்சாச்சி.

உள்நாட்டுக்குள்ள பல முறை விமான பிரயாணம் செஞ்சாலும், வெளி நாட்டுக்கு முதமுறை பயணம். ராத்திரி முழுக்க தூங்காம, கூட வழி அனுப்ப வந்த சொந்தங்களோட பேசிகிட்டே கழிச்சாச்சி. அவங்க திரும்ப திரும்ப கேட்டது எப்போ வருவ, எவ்வளவு நாள் அங்க இருக்க உத்தேசம். அதுக்கு, நானும், வருசத்துக்கு ஒரு முறை கண்டிப்பா வருவேன். 3 வருஷம் முடிஞ்சதும் திரும்ப வந்து இந்தியாவில தங்கிடுவேணு சொன்னேன். (இப்போ 2 வருசத்துக்கு ஒரு முறை போறேன், கிரீன் கார்டு வாங்கிரணும்னு இருக்கேன் :-), 4 வருஷம் ஆச்சு ).

பிளைட்டுல ஏறி துபாய் வந்தாச்சு, நான் பண்ணுன தப்பு, கை பெட்டிய பக்கத்தில வைக்காம, ஒரு நாலஞ்சு சீட் தள்ளி  வச்சிட்டேன். அதனால கடைசியா இறங்கவேண்டியதா போச்சு. பிளட்டுல இருந்து ஏர்போட்டுக்கு போற பஸ்ல நானும் விமான ஊழியர்கள் மட்டும் தான். கடைசியா வந்ததால ஒரே ஓட்டம் தான், அடுத்த நியூயார்க் பிளைட்டு பிடிக்க. இது தான் கடைசி அழைப்பு உடனே வாங்கன்னு சொல்லிகிட்டே இருக்காங்க, ஒரு வழிய போராடி வந்து உக்காந்து நியூயார்க் வந்தாச்சு.

இங்க தான் பெரிய காமெடி, நான் கம்பெனி செலவில 2 - 3 முறை உள்நாட்டுல பிரயாணம் செஞ்சிருக்கேன்.ஏர்போர்ட்ட விட்டு வெளில வந்தா என் பேர எழுதின போர்ட்ட கையில வச்சிக்கிட்டு டிரைவர் நிப்பாங்க. அது மாதிரி நினைச்சி நான் வந்துட்டேன். இந்தியாவில எங்க கம்பெனி டிராவல் டெஸ்க்லேயும், எப்படி ஏர்போர்ட்டுல இருந்து போகணும்னு சொல்ல மறந்துட்டாங்க. நான் வெளில வந்து பாக்குறேன், என்னை கூட்டிகிட்டு போக யாரும் வரல. கொஞ்ச நேரம் தேடிகிட்டு, சரி நண்பர் ஒருத்தர கூப்பிடலாம்னு நம்பர தேடினா கிடைக்கல. அப்புறம் தான் தெரிஞ்சது, எல்லார் காண்டாக்ட் நம்பர் எழுதி வச்ச பேப்பரை இந்தியாவில வச்சிட்டு வந்துட்டேன்னு . புது பர்சுல எல்லாம் மாத்தினதுல அந்த லிஸ்ட் விட்டு போச்சு. இன்னோர் லிஸ்ட் சேப்டிக்காக சூட்கேஸ்ல இருந்தது ஞாபகத்துக்க வர, சூட்கேச திறக்கலாம்னு போனா, அது நம்பர் லாக், எப்படியோ நம்பர் மாறி போச்சு. அதையும் திறக்க முடியல, ஒன்னரை வயசு மகன் பிரயாண களைப்புல அழ, வீட்டம்மா, உங்களுக்கு பொறுப்பே கிடையாது அப்படின்னு ஒரு பக்கம் திட்ட. அப்புறம் நல்ல வேலை அண்ணன் கிட்டயும் அந்த லிஸ்ட கொடுத்து வச்சிருந்ததால, இந்தியாவுக்கு போன் பண்ணி, அவர்கிட்ட இருந்து நண்பரோட நம்பர் வாங்கி, அவருக்கு போன் பண்ணி, நண்பர்  கம்பெனிக்கு போன் பண்ணி, ஒரு வழியா டாக்சி டிரைவர் நம்பர் கிடைச்சுது. இதல்லாம் செய்யறதுக்கு நாலு மணி நேரம் ஆச்சு, அதுக்குள்ள டிரைவர் திரும்ப நியூஜெர்சி பக்கம் போய்ட்டாரு. நான் போன் பண்ணினா அவரும் கொஞ்சம் அவர் டென்சனை  எம்மேல இறக்காம் இறக்கி வச்சாரு. 40 நிமிஷம் ஆகும் அங்கேயே வெயிட் பண்ணுங்க வந்திறேன்னாரு. ஒரு வழியா அவர் வந்து, வண்டில ஏறி உக்காந்தா சில நிமிசத்திலேயே நாங்க மூணு பேரும் தூங்கிட்டோம். நியூயார்க் எப்படி இருந்ததுன்னு கூட தெரியாது, ஒன்னரை மணி நேரம் கழிச்சி டிரைவர் எழுப்பும் போது  இறங்கும் ஓட்டல் வந்திருச்சி. நான் போன் பண்ணினா நண்பர் கையில் இட்லி பார்செல்லோடு  வரவேற்றார்.

இன்று நியூயார்க்கை நினைச்சாலும் அந்த கசப்பான அனுபவம் தான் நினைவுக்கு வரும்.

1 comment:

nisha said...

சூப்பர் எத்தனை வருஷம் ஆனாலும் இதெல்லாம் மறக்கவே முடியாது ........

Post a Comment