Sunday, October 24, 2010

அமெரிக்க தேர்தல் நடைமுறைகள்

அமெரிக்காவின் பல மாகாணங்களில் இப்போது தேர்தல் நடைபெறுகிறது, குறிப்பாக கவர்னர் தேர்தல். இங்குள்ள கவர்னர் பதவி நம் நாட்டின் முதல் அமைச்சர் பதவி போல. நம் நாட்டை போல், சட்டசபை பிரதிநிதி மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு பின்னர் அவர்கள் முதல் அமைச்சரை தேர்ந்து எடுப்பது போல் இல்லாமல் மக்களே நேரடியாக கவர்னரை தேர்ந்து எடுப்பார்கள் இங்கே. 

நம்மூரில் தேர்தல் நடைபெறுகிறது என்றால் எவ்வளவு ஆர்பாட்டம் ஆரவாரம். ஆனால், இங்கே நடக்கும் தேர்தல் முறைகளில் சில எனக்கு பிடித்தது, அதை தான் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


இங்கு தேர்தல் பல கட்டங்களில் நடைபெறுகிறது. முதலில் கட்சியினுள் போட்டி, அதாவது யாரெல்லாம் போட்டியிட விரும்புகிறார்களோ அவர்கள் கட்சியினுள்  போட்டியிடுவார்கள். கட்சியின் உறுப்பினர்கள் அவர்களில் ஒருவரை வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள். இதில் குறிப்பிட வேண்டியது, எல்லா வேட்பாளர்களையும் மேடையேற்றி விவாதம் செய்ய வைப்பார்கள். அவர்கள் தேர்ந்த்தெடுக்கப்பட்டால் என்னென்ன செய்வார்கள், எப்படி செய்வார்கள் என்று விளக்கமாக விவாதம் கொள்ள வேண்டும். விவாதத்திற்கான கேள்விகள் போட்டி வேட்பாளர்களும் கேட்பார்கள், மக்களும் கேட்பார்கள், இல்லை பல கேள்விகளில் இருந்து தேர்ந்த்தெடுக்கப்பட்டவையாகவும் இருக்கலாம். இந்த மாதிரி விவாதம் தேர்தலின் எல்லா கட்டங்களிலும் நடைபெறும். இவ்வாறாக கட்சியினுள் தேர்ந்த்தெடுக்கப்பட்ட ஒருவர் மாற்றுக்கட்சியின் வேட்பாளரோடு போட்டியிடுவார். இன்னொரு விஷயம், இங்கே இரண்டே மாபெரும் கட்சிதான். சிறு சிறு கட்சிகள் உண்டு என்பதை கூகுள் முலம் தான் தெரிந்து கொண்டேன், அப்படி கட்சிகள் இருப்பதே தெரியாத அளவுக்கு இருக்கிறது (நம் ஊரில்!!!).


கட்சியின் வேட்பாளர்கள் தேர்வானதும், மேலே கூறியபடி அவர்களுக்குள் விவாத மேடை நடைபெறும். பல இடங்களில் பலதரப்பட்ட மக்கள் முன்னால் இந்த விவாத மேடை இடம்பெறும். இதன் முலம் ஒவ்வொரு வேட்பாளரின் அறிவு, திறமை, தொலைநோக்க பார்வை போன்ற பல விசயங்களை அறிய வாய்ப்பு கிடைக்கும். இதனால் நடுநிலையான மக்கள் சரியான வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க முடியும்.


இங்கே தேர்தல் நடைபெறுகிறது என்பதை பத்திரிகை, ரேடியோ, இணையத்தளம் போன்ற மீடியாக்கள் மூலம் தான் தெரிந்து கொள்ள முடியும். ஒரு வால்போஸ்டர் கிடையாது, வாக்காள பெருங்குடி மக்களே என்று ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் கிடையாது, வேட்பாளர் கூழைக்கும்பிடு போட்ட படி நகர்வலம் வருவது கிடையாது, வீட்டுக்கு வீடு துண்டு சீட்டு விளம்பரம் கிடையாது, இப்படி நம்மூர் தேர்தல் போல் எந்த ஆரவாரம் இன்றி தேர்தல் நடைபெறும். படத்தில் காட்டி இருப்பது போல (அனுமதித்த) சில வீட்டின்  முன்னால் விளம்பர அட்டை ஊன்றபட்டிருக்கும், அவ்வளவு தான். தேர்தல் நடைபெறும் நாளன்று அலுவலகம், பள்ளி, கல்லூரி எல்லாம் வழக்கம் போல் இயங்கும். தேர்தல் நடைபெறுவதை போன்று எந்த அறிகுறியும் தெரியாது.

இதையெல்லாம் பார்க்கும் போது நம்மூரில் இதை போன்ற தேர்தல் நடைமுறைகள் என்று வருமோ என்ற ஏக்கம் தான் வருகிறது. குறிப்பாக எனக்கு இதில் மிகவும் பிடித்தது, விவாத மேடை தான். அதன் மூலம் மக்கள் சரியான வேட்பாளரை அடையலாம் கொள்ள முடியும். இன்றைய காலத்தில், நம்நாட்டில் பணம் படைத்தவர்கள் மட்டும் தான் போட்டியிட முடியும் என்ற நிலை, அவர்களுக்கு எந்த தகுதியும் தேவை இல்லை என்பது மிக வருந்தகூடியது. அடுத்தது, தேர்தல் சமயத்தில் கட்சி விளம்பரங்களை சுவற்றில், சுவரொட்டிகளில் என்று வரைந்து பொது மக்களுக்கு இடையுறு செய்வது, இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

காத்திருப்போம்!! எதிர்பாத்திருப்போம்!! ஒரு நாள் நம்நாட்டிலும் அரசியல் நாகரிகமாக கையாளப்படும் என்று.

No comments:

Post a Comment